வியாழன், 2 செப்டம்பர், 2021

’ஷுட்டிங்கை நிறுத்திட்டு ஸ்டேஷன்ல வந்து பேசு..’

 

ண்மையில் இயக்குனர்/நடிகர் திரு. கவிதா பாரதியின் படப்பிடிப்பு பிரச்சனையைப் பற்றி முகநூலில் படித்தபொழுது, ஏற்கனவே நான் முகநூலில் பதிவிட்டிருந்த ஒரு விஷயத்தை இங்கும் எழுதவேண்டுமெனத் தோன்றியது.
 
சமூக வலைதளங்களில் போலீஸார் லஞ்சம் வாங்கும் காட்சிகள் பகிரப்பட்டு, அவர்கள்மீது துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் இன்னும் அவர்களிடம் அச்சமோ, அல்லது பொறுப்புணர்வோ உண்டாகவில்லை என்பது வேதனையான விஷயம். 
 
உரிய ஆவணங்களின்றி செல்லும் வாகன ஓட்டிகள், சாலையில் விபத்துகளை உண்டாக்குவோர், விதி மீறுவோர் என அனைவரிடமும் கைநீட்டி பழகிவிட்ட போலீஸார், படப்பிடிப்புக்கு செல்லும் படக்குழுவினரை ஒரு மிகப்பெரிய ஜாக்பாட்டாகவே பார்க்கின்றனர். 

சாலைகளில், சாலைகளை ஒட்டிய தளங்களில் படப்பிடிப்பு நடைபெற்றால் அதை ஒரு மிகப்பெரிய வசூல் மையமாக எண்ணிக் கொள்வதை போலீஸார் என்றைக்கு மாற்றிக்கொள்வார்களோ தெரியவில்லை. 
 
தலைமைச் செயலகத்தில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை கட்டி, வேறுவழியின்றி சிலருக்கு எக்ஸ்ட்ரா கொடுத்து அனுமதி பெற்ற பிறகு, கமிஷனர் அலுவலகம் சென்றும் கையெழுத்து வாங்க வேண்டியிருக்கிறது. இதன் பின்பும் படப்பிடிப்பு ஏரியாவில் போலீஸார் வந்து நின்று வதைப்பதுதான் கொடுமை.

விபத்து நடைபெற்றாலோ, கொலை கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றாலோ, ’இது எங்க லிமிட் இல்ல.. அங்க போங்க.. இங்க போங்க..’ என அலைய விடும் போலீஸார், படப்பிடிப்பு நேரத்தில் மட்டும் ’இது எங்கள் லிமிட்..’ எனக் கூறிக் கொண்டு அக்கம்பக்கத்திலிருக்கும் அனைத்து ஸ்டேஷன்களிலிருந்தும் பேட்ரோல் வண்டியை எடுத்துக் கொண்டு வந்துவிடுகிறார்கள்.. அரசுக்கு கட்டிய தொகை மட்டுமல்லாமல் மேலும் 5,000 முதல் 10,000 வரை செலவு செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகிறது.

லோ-பட்ஜெட் படம், ஹை-பட்ஜெட் படம் என எந்த பாரபட்சமுமின்றி, அவர்கள் எதிர்பார்க்கும் தொகையை கொடுக்காதநிலையில், ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி, ‘ஷூட்டிங்கை நிறுத்திட்டு ஸ்டேஷன் வந்து பேசிட்டு போங்க..’ என்பார்கள். படப்பிடிப்பு தாமதமானால் மற்றொரு நாள் மீண்டும் இந்த இடத்திற்கே வந்து படப்பிடிப்பை ஏற்பாடு செய்வதில் உள்ள சிரமங்களை யோசித்துவிட்டு, எப்படியாவது அந்த சூழ்நிலையை சமாளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு இயக்குனரும் தயாரிப்பாளரும் ஆளாக்கப்படுகிறார்கள்.

இதில் இன்னும் கொடுமை என்னவென்றால், கமர்ஷியல் படப்பிடிப்புகளை போலவே, மாணவர்கள் எடுக்கும் குறும்பட படப்பிடிப்புகளிலும் இவர்களின் தொல்லை தொடர்கிறது. இன்றைய காலகட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் தங்களது பாக்கெட்டில் இருக்கும் பணத்தைக் கொண்டு குறும்படம் எடுக்கத் துவங்கியிருக்கிறார்கள். இவர்களையும் விட்டுவைக்காத போலீஸார், பணம் கொடுக்காத ஒரு இளைஞரின் குறும்படத்தை ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்று அழித்த கொடுமையான சம்பவங்களும் அரங்கேறியிருக்கிறது.

அரசு திரைப்படக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு, படப்பிடிப்பிற்கான அனுமதியை அரசு இலவசமாக வழங்கியிருக்கிறது. ஆனாலும், படப்பிடிப்பு ஏரியாவில் போலீஸார் விடுவதில்லை. ’அந்த பர்மிஷன் லெட்டரெல்லாம் எங்களுக்குத் தேவையில்ல. எங்களை கவனிச்சுட்டுப் போங்க..’ என்பதுதான் அவர்களின் பதில்.
 
படிக்கும் மாணவர்களிடம் கூட பிடுங்கித் தின்னும் நிலையிலா இறைவன் உங்களை வைத்திருக்கிறான்..?

சனி, 28 ஆகஸ்ட், 2021

உங்கள் நண்பர்களின் உயிரைக் காப்பாற்ற உங்களால் முடியும்..!

தொலைக்காட்சி மற்றும் தினசரிகளில் தினந்தோறும் நாம் காண்பவற்றில் மனதை வருத்தும் ஒரு செய்தி, தற்கொலை..!

ஒரு காலத்தில் தற்கொலை என்பது எங்காவது அதிசயமாக நடைபெறும் விஷயமாக, நீண்டகாலம் மக்களிடையே பேசப்படக்கூடிய அளவிற்கு ஒரு தாக்கத்தை உண்டாக்ககூடிய நிகழ்வாக இருந்தது. ஆனால், இன்றோ, தற்கொலை செய்திகளை மற்ற செய்திகளோடு ஒரு செய்தியாக படித்துவிட்டு கடந்து செல்லக்கூடிய மனநிலை மக்களுக்குள் உருவாகிவிட்டிருக்கிறது.

இந்த மரணங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள்தான் என்ன..?

நேத்துகூட நல்லாதான் பேசிகிட்டிருந்தான்..’, ‘இப்புடி ஒரு முடிவு எடுத்துருக்கானே..?’, ’சுத்தமா எதிர்பாக்கல..’ – இதுபோன்ற வார்த்தைகள்தான் மரணித்தவரைச் சுற்றி வெளிப்படும். ஆனால், சுற்றியிருக்கும் இந்த மனிதர்கள் நினைத்திருந்தால் அந்த உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும் என்பதுதான் உண்மை. இது கட்டுரைக்காக எழுதப்படும் வாசகம் அல்ல.

தற்கொலை முடிவுக்கு வரும் நபர்களில் பெரும்பாலானோர் முடிவெடுத்தவுடனேயே செயல்படுத்துவதில்லை. இதைத்தவிர வேறு வழியில்லை என சில நாட்களுக்கு முன்னதாகவே ஒரு எண்ணத்தை உருவாக்கி, பின்னர் அதனை வலுப்படுத்துகின்றனர். அந்த எண்ணம் உருவாவதற்கும் வலுப்பெறுவதற்கும் இடைப்பட்ட காலமே ஒருவனை மரணத்திலிருந்து காப்பாற்றக்கூடிய முக்கியத் தருணம்.

’எனக்குள் இப்படிப்பட்ட தவறான ஒரு எண்ணம் உருவாகிறது, இதைத் தவிர்க்கவேண்டும், வாழ்வதற்கும் பிரச்சனைகளை சந்திப்பதற்கும் நம்மை உறுதியாக வைத்துக்கொள்ளவேண்டும்’ என தனது நிலையை உணரும் மனிதன் மட்டுமே மரணத்திலிருந்து தப்பித்துக்கொள்கிறான். தனது நம்பிக்கைகளை வலுப்படுத்தும் நண்பர்களை, தனக்கு ஆறுதல் சொல்லி தேற்றிவிடும் மனிதர்களைத் தேடிச் சென்று பிரச்சனைகளை எடுத்துரைத்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வழிவகை செய்துகொள்கிறான். எதிர்மறை எண்ணங்கள் தன்னை ஆக்கிரமித்துவிடாமல் இருப்பதற்கு மாற்றுவழிகளை யோசிக்கிறான்.

மாறாக, எதிர்மறையான எண்ணத்திற்குள்ளேயே உழன்றபடி, தொடர்ந்து தனிமையை நாடும் மனிதனே இவ்வுலக வாழ்விலிருந்து தப்பித்துச் சென்றுவிடும் முடிவுக்கு வருகிறான்.

விபத்தில் சிக்கிக்கொள்பவர்களை எந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது என்று முடிவெடுக்கும் முன்னர் முதலுதவி அளிப்பது எப்படி அவசியமாகிறதோ அதைப்போன்றதொரு செயல்தான், இவர்களைக் காப்பாற்ற சுற்றியிருக்கும் மனிதர்களிடமிருந்து தேவைப்படும் நடவடிக்கையும்.

இந்த எண்ணத்திற்கு ஆட்படும் ஒரு மனிதனைக் காப்பாற்ற அவனது பிரச்சனைகள் அனைத்தும் அப்பொழுதே தீர்க்கப்பட வேண்டுமென்பதில்லை. சுற்றியிருப்பவர்களுக்கு அவற்றிற்கான சாத்தியங்களும் குறைவாகவே இருக்கலாம். ஆனால் அந்த நேரத்தில் அவனுக்கு கட்டாயமாகத் தேவைப்படும் நம்பிக்கை மிகுந்த, அன்பான, ஆறுதலான வார்த்தைகள் மட்டும் அதீதமாகவே தேவைப்படும்.

ஒருவனது இயலாத நிலையையும், அவனது மனநிலையையும் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கும் நிலையில், அவனைக் கண்டும் காணாமல் இருப்பது, அவனது வார்த்தைகளை புலம்பல்காளாகக் கருதுவது போன்ற தவறுகளை சுற்றியிருப்போர் தவிர்க்கவேண்டும். இவ்வாறான மனநிலையிலிருக்கும் ஒருவனுக்கு மேலும் மேலும் நெருக்கடி, மற்றவர்களால் மனரீதியான தொல்லைகள் போன்றவை உருவாகும்பொழுது, அவற்றை தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பது போன்ற மிகத் தவறான செயல் வேறெதுவும் இல்லை.

வாழ்க்கையில் கௌரவம், நிம்மதி அனைத்தும் தொலைந்துவிட்டது, நமது வாழ்க்கை வீண், நாம் வாழ்வது மற்றவர்களுக்கும் பிரச்சனை, நமது பிரச்சனைகளைக் கேட்க, தீர்த்துவைக்க எவரும் இல்லை..’ என்ற ரீதியில் தொடர்ந்து தாழ்வு மனப்பான்மையை அதிகமாக வளர்த்துக்கொள்ளும் மனிதர்கள் எளிதில் தற்கொலைக்கு ஆளாகிறார்கள்.

எல்லாருக்கும் வர்ற பிரச்சனைதான், பாத்துக்கலாம் வாங்க.. நாங்கள்லாம் எதுக்கு இருக்கோம்.. விட்ருவோமா..’ போன்ற ஆறுதல் வார்த்தைகளுடன், இவர்களைவிட மோசமான சூழ்நிலைகளிலிருந்து மீண்டவர்களின் வாழ்க்கையை இவர்களுக்கு பொறுமையாக எடுத்துச் சொல்லவேண்டும். இவர்களைத் தனிமையில் விடாமல் பார்த்துக் கொள்வது அவசியம் என்பதோடு, அவர்களைக் கூடியவரை அருகிலேயே வைத்துக் கொள்வதோ, அல்லது நமது பணி விஷயமாக செல்லும் இடங்களுக்கு உடன் அழைத்துச் சென்று மனநிலையை மாற்ற முயற்சிப்பதோ நன்மையைக் கொடுக்கும்.  

நகர வாழ்க்கையில், தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், தொலைபேசி என உணர்வுகளுக்கு சம்பந்தமில்லாத தொழில்நுட்பம் சார்ந்த பொழுதுபோக்குகளில் மூழ்கியே பழகிவிட்ட பலருக்கும், அக்கம்பக்கத்து வீடுகளில் வசிக்கும் நபர்களின் பெயர்கள் கூட தெரியாத நிலை உருவாகிவிட்டிருக்கிறது. பக்கத்து வீட்டிலிருந்து சத்தம் வந்தாலோ அல்லது அவர்களைத் தேடி புதிய நபர்கள் வந்து பிரச்சனைகள் எதுவும் செய்தாலோ, ’நமக்கென்னஎன்ற மனப்போக்கு ஒன்றே முன்னிலை பெறுகின்றது. ஒட்டுதல் இல்லாமல் வாழும் இந்த தனிமை நிலைதான் பல கொள்ளைகளுக்கும் கொலைகளுக்கும்கூட காரணமாக அமைந்துவிடுகிறது.

கிராமங்களில் பெரும்பாலான தற்கொலைகள் தடுக்கப்பட்டுவிடுவதற்கான காரணம், பிரச்சனை உருவாகும்வேளையிலேயே  ஊர்மக்களில் எவரேனும் இருவராவது வீட்டினுள் சென்று விசாரித்து சம்பந்தப்பட்டவரை சாந்தப்படுத்திவிடுவதுதான். ’கவுன்சிலிங்என்று ஆங்கிலத்தில் நாம் சொல்லிக்கொள்ளும் விஷயத்தை, கிராம மக்கள் சர்வசாதாரணமாகவே செய்துவிடுகிறார்கள்.

இக்கட்டுரையின் சாராம்சமே, மனிதர்கள் உயிருடன் இருக்கும்வேளையில் அவர்களின் மனநிலையை புரிந்துகொண்டு, அவர்களது உணர்வுகளுக்கும் பிரச்சனைகளுக்கும் ஏற்றபடி அவர்களுடன் உரையாடி, எதிர்மறை சிந்தனைகளிலிருந்து அவர்களை விடுவிக்க முயற்சிக்க வேண்டுமென்பதுதான். எந்தப் பிரச்சனை வந்தாலும் நமக்காக மனிதர்கள் இருக்கிறார்கள், இவர்களுக்காக நாம் வாழவேண்டும் என்ற நம்பிக்கையினை மற்றவர்களுக்குள் உண்டாக்கவேண்டும்.

பணம் மற்றும் பொருட்களைவிட மனரீதியிலான உதவியும், நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளுமே பெரும்பாலானோருக்கும் தேவைப்படுகிறது. இதை பல கோடீஸ்வரர்களின் தற்கொலைகள் நிரூபித்திருக்கின்றன.

பணத்திற்குப் பின்னால் ஓடும் இயந்திர மனிதர்களாகிவிட்ட நாம், சிறிதேனும் மற்றவர்களின் உயிர் மீது அக்கறை கொள்வோம். மரணத்திற்குப் பின்னர் ‘அச்சச்சோ..’ அனுதாபம் காட்டும் சூழலை மாற்றி, இனியாவது நம்மைச் சுற்றி வாழும் மனிதர்களின் வாழ்க்கையின் மீதும் அக்கறைக் கொள்ள முயற்சிப்போம்.